மேற்கு வங்க சட்டப்பேரவை பதவி காலம் வரும் மே மாதம் முடிவடைய உள்ளதால் அங்கு மொத்தமுள்ள 294 தொகுதிகளில், முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்.23ம் தேதியும், 2வது கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்.29ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என்று மார்ச் 15ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார்.
கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போன்று தற்போதும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் இருமுனைப் போட்டி நிலவுவதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மாநிலத்தின் சமூக நலத்திட்டங்களை முன்வைத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. மறுபுறம், பொருளாதார வளர்ச்சி மற்றும் ஆட்சிக்கு எதிரான மனநிலையை முன்னிறுத்தி பாஜகவின் தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.
இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் கடந்த சில வாரங்களாக தங்களது ஆதரவாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 152 தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது.
மே.வங்கத்தின் வடக்கு பகுதியான கூச் பெஹார், அலிபுர்துவார், ஜல்பைகுரி, டார்ஜிலிங் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 1 முதல் 76 மற்றும் 203 முதல் 258, 275 முதல் 294 வரையிலான தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் மொத்தம் வேட்பாளர்கள் 1,478 பேரில் 167 பெண் வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். மூன்றுக்கும் மேற்பட்ட குற்ற பின்னணி கொண்ட வேட்பாளர்கள் போட்டியிடும் 66 தொகுதிகள் பதற்றம் நிறைந்த ‘ரெட் அலர்ட்’ தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவை முன்னிட்டு அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க மாநிலம் முழுவதும் மத்திய ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் இணையதள நேரடி ஒளிபரப்பு மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.


