கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரும், முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ பட தயாரிப்பாளருமான கே.வெங்கட நாராயணாவை, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் டெல்லி முகமாக இருக்கக் கூடிய இந்த பதவிக்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரை நியமித்தது, தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தலைமையிலான தவெக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக வெங்கட் நாராயணாவை நியமித்திருப்பதற்கு, விஜய் அரசை எதிர்த்து கூட்டணி கட்சியான காங்கிரஸ் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்துவதா? என்று கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது சமூக வலைத்தள பதிவில், இரண்டு கேள்விகள் தான் எழுகின்றன. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு.
தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா? மேகதாது அணைக் கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சனைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவாரா? அல்லது அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பிரதிநிதியாக செயல்படுவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


