தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் காலமானார். அவருக்கு வயது 73.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.
அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலுக்கு திரை உலகத்தினர் பெருந்திரளாக திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாக்யராஜ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். திமுக மூத்த தலைவர்கள் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு ஆ.ராசா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முதல்வர் விஜய் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பாக்கியராஜ் அவர்கள் வெறும் இயக்குநர் அல்லது நடிகராகத் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல், மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர், கூர்மையான வசனகர்த்தா மற்றும் திறமையான இசையமைப்பாளர் எனப் பல்வேறு தளங்களில் முத்திரை பதித்தவர். இத்தகைய பன்முக ஆளுமை கொண்ட ஒரு மாபெரும் கலைஞரின் மறைவுச் செய்தி கேட்டு தான் மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன்.
பாக்கியராஜின் படங்கள் எப்போதும் எளிய கிராமிய வாழ்வியலையும், குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் ஆழமான பாசப் பிணைப்புகளையும் எதார்த்தமாகப் பிரதிபலிப்பவை. தனித்துவமான கதையாக்கத்தோடு, சுவாரசியமான நகைச்சுவையையும் கலந்து தருவதில் அவர் நிகரற்றவராகத் திகழ்ந்தார். சாமானிய மக்களின் உணர்வுகளைத் தொட்டதாலேயே அவர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பிடித்தார். தமிழ்த் திரைப்பட உலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் அளவிட முடியாதது.
அவரது ஒவ்வொரு படைப்பும் மக்களுக்கு நல்வழிகாட்டும் மனிதநேயத்தையும், சமூக விழுமியங்களையும் (Social Values) பேசத் தவறியதில்லை. காலங்கள் கடந்தாலும் அவரது திரைப்படங்கள் அழியாத நினைவுகளாகத் தமிழ் திரையுலகில் என்றும் நிலைத்திருக்கும். இத்தகைய உன்னதக் கலைஞரின் இழப்பு, சினிமா உலகிற்கு ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
கே. பாக்கியராஜின் மறைவால் தவித்து வரும் அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அதோடு மட்டுமின்றி, திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் இந்தத் துயரத்தைத் தாங்கும் சக்தியை இறைவன் வழங்க வேண்டும். மறைந்த பாக்கியராஜ் அவர்களின் ஆன்மா இறைவனின் திருவடியில் நிம்மதியாக இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கும் பெருமைக்கும் கடந்த பல தசாப்தங்களாகத் தொண்டாற்றிய கே. பாக்கியராஜின் உன்னதமான கலைப் பயணத்தைப் போற்றும் வகையில், தமிழக அரசு ஒரு மிக முக்கிய முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, அவரது இறுதிச் சடங்குகள் மற்றும் இறுதிப் பயணத்தின்போது தமிழக அரசின் சார்பில் முழு அரசு மரியாதை (State Honours) வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது இரங்கல் செய்தியில், ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்! இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் பாக்யராஜ் அவர்கள்.
தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர். தமது படைப்புகளால் பாக்யராஜ் அவர்கள் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார் என்று கூறியுள்ளார்.


