தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் முதல்வரும் திமுக தலைவர்மான மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் தொண்டர்களுக்கு விழிப்புணர்வு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையவேண்டும் என உங்களில் ஒருவனான நான் நினைப்பதைவிடவும், அன்பு உடன்பிறப்புகளான நீங்கள் நினைப்பதைவிடவும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கொள்கைவழித் தோழமைக் கட்சிகள் எதிர்பார்ப்பதைவிடவும் தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் பயன் தந்திருப்பதாலும், பா.ஜ.க. தலைமையில் அ.தி.மு.க. மற்றும் சில கட்சிகள் இணைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியால், அதன் ஒன்றிய அரசால், தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாலும், அடிமை அ.தி.மு.க.வுக்கும் அதனுடன் உள்ள கட்சிகளுக்கும் வாக்களித்தால் அது நேரடியாக பா.ஜ.க.வுக்கு போடும் வாக்குதான் என்பதை உணர்ந்திருப்பதாலும், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே வாக்களிப்போம் என்பதே தமிழ்நாட்டு வாக்காளர்களின் உறுதியான முடிவு.
மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் எதிரிகளுக்கும் அவர்களின் அடிமைகளுக்கும் இங்கே இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். திருவாரூரில் மார்ச் 31 அன்று தேர்தல் பரப்புரையைத் தொடங்கினேன். ஏப்ரல் 21 அன்று நான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பரப்புரையை நிறைவு செய்திருக்கிறேன்.
தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் மட்டுமின்றி, அந்தக் கூட்டங்கள் நடக்கின்ற ஊரில் காலை நேர நடைப்பயணத்துடன் பொதுமக்களுடனான சந்திப்பு, கலந்துரையாடல், சாலை வலம் என பரப்புரையில் ஈடுபட்டேன்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கழக உடன்பிறப்புகள், தி.மு.க போட்டியிடும் தொகுதிகளிலும், தோழமைக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் கடுமையாக உழைக்கின்றனர். தோழமைக் கட்சியினரும் கழகம் போட்டியிடும் தொகுதிகளில் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வெளிப்பட்ட உடன்பிறப்புகளின் அயராத உழைப்பு, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23-ஆம் தேதியன்றும் விழிப்புடன் தொடர்ந்திட வேண்டும். ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்பே தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிக்கும் பாக நிலை முகவர்களை (பிஎல்ஏ 2) நியமித்து, பத்து உறுப்பினர்களைக் கொண்ட பாகக் குழுக்களையும் (பிஎல்சி) அமைத்து, அதில் இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகள் இடம்பெறச் செய்ததுடன், தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் டிஜிட்டல் பூத் ஏஜண்ட் எனப்படும் பிடிஏ-க்களையும் நியமித்து ஒவ்வொரு பூத் வாரியாக தேர்தல் களப் பணியை மேற்கொண்டிருக்கிறது திமுக.
அத்துடன், ஓரணியில் தமிழ்நாடு செயல்பாட்டின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, மக்களை சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெற்று, அவற்றை டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்துள்ளனர் கழக உடன்பிறப்புகள்.
அன்பு உடன்பிறப்புகளே.. நீங்கள் அயராது உழைத்ததை வெற்றிகரமாக அறுவடை செய்ய வேண்டிய நாளான ஏப்ரல் 23 அன்று, இத்தனை நாட்கள் கடுமையாகப் பணியாற்றியதை விட, அதிக விழிப்புடன் இருந்து பணியாற்றிட வேண்டும். தேர்தல் களத்தில் தி.மு.க.காரனை மிஞ்சி உழைப்பதற்கு வேறெந்த கட்சியும் கிடையாது என்கிற பெருமை நமக்கு உண்டு. அதை 2026 சட்டமன்றத் தேர்தல் களத்திலும் முழுமையாக மெய்ப்பித்து, மகத்தான வெற்றிக்கு ஒவ்வொரு உடன்பிறப்பும் காரணமாக இருந்திட வேண்டும் என்பதே என்னுடைய அன்புக் கட்டளை.
கழகத்தின் சட்டத்துறை சார்பில் கண்காணிப்பகத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதால், வாக்குப்பதிவு நாளில் பணியாற்றும் பூத் ஏஜெண்ட்டுகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகளுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள்.
கழகத்தினர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமானவற்றையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வாக்குச்சாவடி முகவர்கள் (பூத் ஏஜெண்ட்டுகள்) வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பாகவே வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும்.
வாக்கு பதிவன்று பிஎல்ஏ 2 மற்றும் பிஎல்சி, பிடிஏ ஆகியோர் தங்களது வாக்கினை முதல் வாக்காக பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர், தங்களது பாகத்தில் உள்ள கழக ஆதரவு, தோழமைக் கட்சிகளின் ஆதரவு வாக்குகளையும், விரைந்து பதிவு செய்திடவும் ஒருவர் கூட விடுபடாத வகையிலும் கழக நிர்வாகிகள் ஆவன செய்ய வேண்டும்.
வாக்குச்சாவடி முகவர்கள் (பூத் ஏஜெண்ட்டுகள்) எக்காரணத்தை முன்னிட்டும் ஆரம்பத்திலேயே தேர்தல் அதிகாரி கொடுக்கும் 17சி-இல் கையொப்பமிடக் கூடாது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் சரிபார்த்த பிறகே, கையொப்பம் இட்டு நகல் பெற வேண்டும்.
வாக்குச்சாவடி முகவர்கள் படிவம்17சி உள்ளிட்ட அனைத்துப் படிவங்களிலும் தேர்தல் அதிகாரியுடன் சேர்ந்து கையொப்பம் இடவேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் படிவம் 17சி நகலினை தவறாமல் பெற்று அதன் அசலினை வேட்பாளர் வசம் சேர்க்க வேண்டும்.
இதில் எந்த ஒன்றையும் தவறவிடாமல் விழிப்புடன் இருந்து கழகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
வெற்றி நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே! விழிப்புடன் பணியாற்றி வெல்வோம் ஒன்றாக! என்று எழுதியுள்ளார்.


