நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தோ்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை ஆண்டுதோறும் என்டிஏ நடத்தி வருகிறது.
என்எம்சி.யின் https://www.nmc.org.in இணையதளத்தில் தேர்வுக்கான பாடத் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெறும் இத்தேர்வில் மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும்.
மே 3ம் தேதி நடைபெறவுள்ள இந்த தேர்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த பிப். 8ம் தேதி தொடங்கியது. ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 9ம் தேதி நள்ளிரவு 11.50 மணியுடன் நிறைவடைய இருந்த நிலையில், தேசிய தேர்வு முகமை (என்டிஏ) இணையதளம் 4 நாட்களாக முடங்கியதாக மாணவர்கள் தரப்பில் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, மார்ச் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட 30 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 552 நகரங்களில் தேர்வு நடக்கிறது.
மேலும் போர் பதற்றம் நிலவும் துபாய், அபுதாபி, தோகா, மஸ்கட், ரியாத் நகரங்கள் மற்றும் சிங்கப்பூர் என 14 இடங்களிலும் தேர்வு நடைபெற உள்ளது.
இதுவரை 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுமையம், ஹால் டிக்கெட் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரும் 26ம் தேதி வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மேலும், மாணவர்களின் நலன் கருதி நீண்ட தொலைவில் இல்லாமல், 99.2 % மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு மையம் அமைந்துள்ள நகரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், மே மாதம் 3ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என்றும் என்டிஏ தெரிவித்துள்ளது.


