தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் 10ம் தேதி முடிவடைகிறது. இதனையொட்டி தமிழகத்தில் ஏப்.23ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து சூடு பிடித்த தமிழக அரசியல் களத்தில், தேர்தல் பரப்புரை நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான தமிழக என்டிஏ கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அடங்குவர்.
தமிழ்நாட்டில் 5 கோடியே 73 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி உள்ளவர்களாவர்.
இந்நிலையில், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தேர்தலையொட்டி, தமிழகத்தில் மொத்தமுள்ள 75,064 வாக்குப்பதிவு மையங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தலில் பயன்படுத்தும் அழியாத மை உள்ளிட்ட பொருட்கள் உள்ளிட்டவைகள் துப்பாக்கி பாதுகாப்புடன் நேற்று மதியம் முதல் எடுத்து செல்லப்பட்டு அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்ற வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் பாதுகாப்பாக சென்று வாக்களிக்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 85 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பதட்டமான 5,938 வாக்குச்சாவடிகளில் 300 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் அலுவலர்கள் நேற்று மாலை முதல் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று மின்னணு வாக்கு இயந்திரத்தை பொருத்தும் பணியில் ஈடுபட்டு, தயார் நிலையில் வைத்தனர்.
மாநிலம் முழுவதும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி அனைத்து மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் அமைதியான முறையில் தேர்தல் நடத்தும் வகையில் துணை ராணுவ வீரர்களுடன் இணைந்து 1.4 லட்சம் போலீசார் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கும் எண்ணும் மையங்களில் அந்தந்த மாவட்ட காவல்துறை, மாநகர ஆணையர்களுடன் இணைந்து 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இணைப்புடன் சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


