தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் தங்களது தொகுதியில் உள்ள வாக்கு மையங்களுக்கு சென்று தங்களது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நீலாங்கரை மாநகராட்சித் தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தேர்தல் ஆணையத்திற்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
தவெகவின் அதிகாரபூர்வ வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டின் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து முடக்கம் மற்றும் அதன் விளைவாக வாக்காளர்கள் படும் அவதி குறித்து ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் பேருந்து நிலையங்களில் சிக்கித் தவிப்பது நிர்வாகத்தின் திட்டமிடல் குறைபாடா அல்லது திட்டமிட்ட சதியா என்ற ஐயத்தை ஏற்படுத்துவதாகவும் இது இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை வாக்குரிமையின் மீதான தாக்குதலாகும் என்று கூறியுள்ளார்.
தேர்தல் பணிக்காக அதிகப்படியான பேருந்துகள் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், சாதாரண வாக்காளர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாதது பலரை வாக்களிக்க விடாமல் தடுக்கும் செயலாகும் எனக் கூறியுள்ள அவர், தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு, பேருந்து நிலையங்களில் தவிக்கும் வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்ல கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அதே போல், வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்தும், வாக்குப்பதிவு மிகவும் மெதுவாக நடப்பதாகப் புகார்கள் வருகின்றன. இது வாக்காளர்களைச் சோர்வடையச் செய்து வாக்குப்பதிவு சதவீதத்தைக் குறைக்கும் எனவும், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு மேற்பார்வை அதிகாரியை நியமித்து, எவ்விதத் தாமதமுமின்றி வாக்குப்பதிவு நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், போக்குவரத்துத் தடைகள் மற்றும் நீண்ட வரிசைகளைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கு இதற்கான அதிகாரம் உள்ளது. மாலை நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்கு வந்து சேரும் அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதை உறுதி செய்ய இது மிக அவசியம்.
ஜனநாயகத்தின் முதுகெலும்பான வாக்குரிமையை நிலைநாட்ட, தேர்தல் ஆணையம் வெறும் வேடிக்கை பார்க்காமல் உடனடியாகச் செயல்பட வேண்டும். தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் மக்களின் ஜனநாயக நம்பிக்கையைச் சிதைக்கும் என்று அந்த அவசரக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


