தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் 10ம் தேதி முடிவடைய உள்ளதால், தமிழகத்தில் ஏப்.23ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து சூடு பிடித்த தமிழக அரசியல் களத்தில், தேர்தல் பரப்புரை நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது.
தமிழ்நாட்டில் 5 கோடியே 73 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான தமிழக என்டிஏ கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அடங்குவர்.
தேர்தலையொட்டி, தமிழகத்தில் மொத்தமுள்ள 75,064 வாக்குப்பதிவு மையங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தலில் பயன்படுத்தும் அழியாத மை உள்ளிட்ட பொருட்கள் உள்ளிட்டவைகள் துப்பாக்கி பாதுகாப்புடன் நேற்று மதியம் முதல் எடுத்து செல்லப்பட்டு அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 85 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பதட்டமான 5,938 வாக்குச்சாவடிகளில் 300 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது.
இதனிடையே, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி சராசரியாக 17.69% வாக்குகள் பதிவான நிலையில், அதன் பின்னர் 11 மணி நிலவரப்படி 37.56% வாக்குகள் பதிவானது.
கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 26.29% பதிவான நிலையில், 2026 தேர்தலில் காலை 11 மணிக்கு 11.27% கூடுதலாக 37.56% வாக்குகள் பதிவாகி உள்ளது.
மதியம் 1 மணி நிலவரப்படி சுமார் 56.81% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் மதியம் 1 மணிக்கு பதிவான 39.61% வாக்குப்பதிவை விட 17.2% கூடுதலாகும்.
இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43% வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் 42 தொகுதிகளில் 60%க்கு மேல் வாக்குப் பதிவாகி உள்ளது.
இதன்படி, சென்னையில் 68.13%, கோவை 71.16%, மதுரை 67.15%, திருச்சி 71.05%, தூத்துக்குடி 65.18%, நெல்லை 62.84%, அரியலூர் 68.97%, செங்கல்பட்டு 69.53% கடலூர் 68.53%, தருமபுரி 74.68%, திருவள்ளூர் 75.61%, பவானி 74.29%, திருவாரூர் 68.43%, திண்டுக்கல் 74.35%, ஈரோடு 61.79%, கள்ளக்குறிச்சி 71.11%, காஞ்சிபுரம் 72.51%, கன்னியாகுமரி 61.95%, கரூர் 76.08%, கிருஷ்ணகிரி 70.07%, மயிலாடுதுறை 65.80%, நாகை 69.96%, நாமக்கல் 76.43%, பெரம்பலூர் 70.54%, புதுக்கோட்டை 69.85%, ராமநாதபுரம் 63.14%, ராணிப்பேட்டை 72.46% சேலம் 75.79%, சிவகங்கை 64.74%, நீலகிரி 63.67%, தேனி 67.68%, தஞ்சை 66.65%, தென்காசி 67.14%, திருப்பத்தூர் 71.46%, திருப்பூர் 75.38%, திருவண்ணாமலை 72.11%, வேலூர் 71.49% வாக்குகள் உள்பட தமிழகம் முழுவதும் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 70% வாக்குகள் பதிவாகி உள்ளன.
கோவை, திருச்சி, தருமபுரி, திருவள்ளூர், பவானி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருப்பூர், வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 70 சதவீதத்துக்கு மேல் வாக்குப்பதிவாகியுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.35% (6.29 கோடி வாக்காளர்களில் 3.35 கோடி பேர்) வாக்குகள் மட்டுமே பதிவான நிலையில், இந்த தேர்தலில் 16.65% வாக்குகள் கூடுதலாக பதிவாகி பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% (5.73 கோடி வாக்காளர்களில் 4.01 கோடி பேர்) வாக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில் 80% முதல் 85% வரையிலான வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


