தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக எதிர்பாராத அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. நடிகர் விஜயின் தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் 59 தொகுதிகளிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, சிபிஐ 2, சிபிஎம் 2, விசிக 2, தேமுதிக 1 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் தவெக வேட்பாளரும் முன்னாள் திமுக எம்எல்ஏவுமான வி.எஸ். பாபுவிடம் தோல்வியடைந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு அனுப்பி வைத்தார். புதிய அரசு அமையும் வரை மு.க.ஸ்டாலினை காபந்து முதல்வராக தொடரும்படி ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, திமுகவின் புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
இந்த கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 7ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணி அளவில் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும். அது போது புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.


