தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக எதிர்பாராத அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. நடிகர் விஜயின் தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் 59 தொகுதிகளிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, சிபிஐ 2, சிபிஎம் 2, விசிக 2, தேமுதிக 1 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் சேப்பாக்கம், துறைமுகம் ஆகிய 2 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட அனைவரும் தோல்வியடைந்தனர்.
இதைத் தொடர்ந்து அவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு அனுப்பி வைத்தார். புதிய அரசு அமையும் வரை மு.க.ஸ்டாலினை காபந்து முதல்வராக தொடரும்படி ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, திமுகவின் புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்தார். இதன் போது, வெற்றி பெற்ற நேரத்தில் மட்டுமல்ல இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களுடன் இருப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


