தமிழகத்தில் 11 ஆண்டு காலமாக நீடித்து வந்த திமுக, காங்கிரஸ் கூட்டணி முறிவடைந்தது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக எதிர்பாராத அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. நடிகர் விஜயின் தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் 59 தொகுதிகளிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, சிபிஐ 2, சிபிஎம் 2, விசிக 2, தேமுதிக 1 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் சேப்பாக்கம், துறைமுகம் ஆகிய 2 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட அனைவரும் தோல்வியடைந்தனர்.
இதைத் தொடர்ந்து அவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு அனுப்பி வைத்தார். புதிய அரசு அமையும் வரை மு.க.ஸ்டாலினை காபந்து முதல்வராக தொடரும்படி ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேர்தலுக்கு முன்னதாக, திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையின் போது ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதி என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வந்தது.
அப்போது, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், எம்பி ஜோதிமணி, கிள்ளியூர் ராஜேஷ்குமார், ராகுலுக்கு நெருக்கமான பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தவெகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டப்பேரவை அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தவெக தரப்பில் இருந்து திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவு கோரி கடிதம் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தவெகவுக்கு ஆதரவளிக்க முடிவெடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பனையூர் தவெக அலுவலகத்துக்கு சென்ற தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தவெக தலைவர் விஜயிடம் ஆதரவு கடிதத்தை வழங்கினர்.
இதன் மூலம், தமிழகத்தில் கடந்த 11 ஆண்டு காலமாக நீடித்து வந்த திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.


