தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 2025-26ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வுகள் 12ம் வகுப்புக்கு மார்ச் 2ம் முதல் 26ம் தேதி வரை நடந்து முடிந்தன.
இந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வை, 3,412 தேர்வு மையங்களில், பள்ளி மாணவர்கள் 7,99,692 பேரும், தனித்தேர்வர்கள் 27,783 என மொத்தம் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.
கடந்த மார்ச் 2ம் தேதி தொடங்கி 26ம் தேதி நடந்து முடிந்த 12ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப். 6ம் தேதி முதல் ஏப்.20ம் தேதி வரை நடந்து முடிந்தன. விடைத்தாள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் இணையதளத்தில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டன.
இதையடுத்து, தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு முடிவிற்காக காத்திருக்கும் நிலையில், புதிய அரசு ஆட்சி மாற்றத்தின் காரணமாக, தேர்வு முடிவுகளை வெளியிட அரசின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் பெறுவதில் ஏற்படும் காலதாமதம் காரணமாக தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், திட்டமிட்டபடி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி காலை 9.30 மணிக்கு ஆன்லைனில் வெளியாகும் என அரசு தேர்வுத்துறை இயக்ககம் நேற்று அறிவித்தது.
அதன்படி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மொத்தம் 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் 95.20% மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 93.19 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 3,47,527 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். எப்போதும் போல மாணவிகளின் தேர்ச்சி எண்ணிக்கை அதிகம். மாணவர்களை விட மாணவிகள் 3.81 சதவீதம் தேர்ச்சி அதிகம்.
மாவட்டத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம் 98.87 சதவீதம் தேர்ச்சியும், சிவகங்கை மாவட்ட இரண்டாது இடம் பிடித்து 98.05 சதவீதம் தேர்ச்சியும், கன்னியாகுமரி மாவட்டம் மூன்றாவது இடம் பிடித்து 97.63 சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளன.
அரசு பள்ளிகளை பொறுத்தவரை, ஈரோடு மாவட்டம் முதலிடம், சிவகங்கை இரண்டாம் இடம் திருச்சி மூன்றாம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வினை விட இவ்வாண்டு தேர்ச்சி 0.17% தேர்ச்சி விகிதம் கூடுதலாக உள்ளது. சிறைவாசிகள் 250 பேர் தேர்வை எழுதியிருந்ததில், 238 பேர் தேர்ச்சி பெற்றுளனர். வரும் 13ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த தேர்வில் தமிழில் 83, ஆங்கிலத்தில் 91, கணிதத்தில் 732, இயற்பியலில் 105, வேதியியலில் 632, உயிரியலில் 784 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு முதன்முறையாக வாட்ஸ்அப் மூலம் முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு “Hi” என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் தேர்வு முடிவுகள் வாட்ஸ்அப்பிற்கே வந்துவிடும்.
மாணவர்கள், தனித்தேர்வர்கள் ஏற்கெனவே கொடுத்திருந்த செல்போன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. இதுதவிர, TNRESULTS.NIC.IN, DGE.TN.GO.IN, RESULTS.DIGILOCKER.GOV.IN இணையதளங்களிலும், பயின்ற பள்ளிகளிலும், 78452 52525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தேர்வு முடிவுகளை அறியலாம்.


