தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக எதிர்பாராத அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. நடிகர் விஜயின் தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் 59 தொகுதிகளிலும், கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, சிபிஐ 2, சிபிஎம் 2, விசிக 2, தேமுதிக 1 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் திமுக வலுவான எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அனைத்து கட்சிகளும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.
இதனிடையே, தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறாக இருக்காது என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
திமுகவின் புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
மேலும், திமுக, அதிமுக கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க அக்கட்சிகளின் தலைவர்கள் மூத்த நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மூத்த திமுக நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அதே போல் சென்னையில் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. முக்கிய கட்சிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஆலோசனை நடத்துவதால் தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.


