மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று பிற்பகல் 3 மணிக்குத் தமிழக முதல்வர் விஜயை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்திக்க உள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக 4 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும், தவெக அரசு அமைந்த பிறகு, முதல்வர் விஜய் திமுக, விசிக, கம்யூ.கட்சிகள், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்த போது வைகோவையும் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இதனிடையே, திருச்சி கிழக்கு தொகுதியில் நடந்த நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்க திருச்சி சென்ற முதல்வர் விஜயை மதிமுக செயல் தலைவர் துரை வைகோ விமான நிலையத்தில் வரவேற்றார்.
அதன் பின்னர், திமுகவின் செயல்பாடுகள் குறித்து துரை வைகோ விமர்சித்ததும், கூட்டணியில் தொடர்வது குறித்து பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று மறைமுகமாக கூறியதும் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக இருப்பதன் வெளிப்பாடாகவே கருதப்பட்டது.
மேலும், மதிமுகவின் அவைத்தலைவரான ஆடிட்டர் அர்ஜுன் ராஜ் சமீபத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், பாம்புக்கு பால் வார்த்தாலும் நஞ்சை கக்கும்; அதுபோல் திமுக ஒரு நச்சுப்பாம்பு என்றும் திமுக, மதிமுகவை அழிக்க நினைப்பதாகவும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று பிற்பகல் 3 மணிக்குத் தமிழக முதல்வர் விஜயை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்திக்க உள்ளார்.
ஏற்கனவே, மதிமுக நிர்வாகிகள் பலரும் தவெக கூட்டணியில் இணையும்படி வைகோவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையிலும், மதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளதாலும், இச்சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதுடன், அரசியல் ரீதியாக மதிமுகவின் அடுத்தகட்ட நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
அதே நேரம், தமிழகம் சார்ந்த பல்வேறு முக்கியக் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்த மனுக்களை வைகோ முதல்வரிடம் நேரடியாக முன்வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


