கடந்த சில நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,680 மற்றும் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.25 ஆயிரம் சரிவடைந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. அதன்படி, சவரனுக்கு ரூ.1200ம் கிராமுக்கு ரூ.150ம் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவை தங்கம் விலையில் எதிரொலிப்பது வழக்கமாகும். அதன் அடிப்படையிலேயே, தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது உலகப் பொருளாதாரத்தை புதிய பாதையில் கொண்டு சென்றுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியுள்ளது. மேலும், அமெரிக்க பெடரல் வங்கி அதன் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற அச்சத்தினால் தங்கம் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.
கடந்த மாதத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டதால், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்தது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளான திங்களன்று எந்த மாற்றமுமின்றி விற்பனையான நிலையில், செவ்வாயன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து விற்பனையானது.
அதைத் தொடர்ந்து, புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் சவரனுக்கு தலா ரூ.1,680 வீதம், 2 நாட்களில் கிராமுக்கு ரூ.420ம் சவரனுக்கு ரூ.3,360 அதிரடியாக குறைந்தது.
இதனிடையே, தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.640 அதிகரித்து கிராம் ரூ.13,300க்கும், சவரன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400க்கும் விற்பனையானது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.70, சவரனுக்கு ரூ.560 அதிகரித்து கிராம் ரூ.13,370க்கும், சவரன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 960க்கும் விற்பனையாகி வருகிறது.
அதே நேரம், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் கட்டி வெள்ளி விலை கடந்த சில நாட்களில் ரூ.25,000 குறைந்த நிலையில், நேற்று கிலோவுக்கு ரூ.15,000 உயர்ந்தது.
இந்நிலையில், இன்று எந்த விலை மாற்றமுமின்றி, கிராம் வெள்ளி ரூ.245க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.


