அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
அதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், சமூக ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், முதியோர், விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1200 லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தொகையை அரசே ஏற்கும் என்றும் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.
மேலும், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும் எனவும் ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது, காளையை அடக்கும் வீரர்கள் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேர்ந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக அரசின் சார்பில் மானியமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தவிர, சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த இஸ்லாமிய, கிறிஸ்தவ மகளிர் சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றும் மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அவர் அறிவித்தார்.


