தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களின் பழைய பெயர் பலகைகளில் ஆங்கிலம் முக்கியத்துவம் பெற்றிருந்த நிலையில், சிவகாசியில் புதிய பெயர் பலகையில் இந்தி பிரதானமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை பூங்கா ரயில் நிலையத்தைத் தொடர்ந்து, தற்போது சிவகாசியிலும் இந்தியை முதன்மைப்படுத்தி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்களின் மொழி உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் மத்தியில் ஆளும் பாஜக அரசு வேண்டுமென்றே இத்தகைய கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தும் திமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக மக்கள் வரும் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று பாஜகவை எச்சரித்துள்ளனர்.
மேலும், இந்தி பிரதானப்படுத்தப்பட்டுள்ளதற்கு திமுகவின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி மற்றும் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி, நோய் தொற்றைப் போல ஊரெங்கும் பரவிடும் இந்தி திணிப்புக் கிருமியைக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
அதே போன்று, தமிழை பின்னுக்குத் தள்ளி இந்திக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் தங்கம் தென்னரசு அவரது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தெற்கு ரயில்வேயின் இத்தகைய மறைமுக இந்தித் திணிப்பு மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு முடிவு கட்ட வைக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


