ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வுக் கூட்டம் நடத்துகிறது. இதில் வட்டி விகிதம் உட்பட பல்வேறு கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நடப்பு மாதத்துக்கான கூட்டம், ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையில் நடந்தது.
இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர் கூறிய போது, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 5.25 சதவீதமாகவே நீடிக்கும். இந்த விகிதம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கும். தேவைப்பட்டால் பின்னர் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.
டிஜிட்டல் மோசடியால் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இழக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச இழப்பீடாக ரூ.25,000 இழப்பீடு வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் மோசடி பேர்வழிகளிடம் ஒரு முறை பாஸ்வேர்டு (ஓடிபி) பகிர்ந்து கொண்ட பிறகும் வங்கி கணக்கில் பணம் இழந்தவர்களுக்கு இழப்பீடு கிடைக்கும்.
இத்தொகை, ரூ.85,000 கோடி மதிப்பிலான டெபாசிட்தாரர் விழிப்புணர்வு நிதியில் இருந்து வழங்கப்படும். அதேநேரத்தில், ஒரு வாடிக்கையாளர் தனது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே இழப்பீடு பெற முடியும். அதில் எந்தவிதமான தவறான உள்நோக்கமும் இருக்கக் கூடாது.
அதாவது, வாடிக்கையாளர்கள் தாங்களாகவே முன்வந்து அல்லது வேறு யாரோ ஒருவரின் தூண்டுதலினால் ஏமாற்றப்பட்டிருந்தாலும், எந்தக் கேள்வியும் கேட்கப்படாமல், ரூ.25,000 வழங்கப்படும். அந்தப் பரிவர்த்தனை தற்செயலாக நடந்திருந்து, அவர்கள் பணத்தை இழந்திருந்தால், இழப்பீடு கிடைக்கும்.
இந்த மோசடி விவகாரத்தில் வாடிக்கையாளர்களுக்கும் பொறுப்பு இருக்க வேண்டும். மோசடித் தொகை ரூ.25,000 வரம்புக்குள் இருந்தால், அந்த தொகையில் 15 சதவீதத்தை வாடிக்கையாளரே ஏற்க வேண்டும். அதிக மதிப்புள்ள மோசடியாக இருந்தால் அதிகபட்ச இழப்பீடு ரூ.25,000 என நிர்ணயிக்கப்படும் என்று தெரிவித்தார்.


