பொங்கல் வெளியீடாக கடந்த மாதம் 9ம் தேதி திரைக்கு வரவிருந்த ஜன நாயகன் படத்திற்கு சென்சார் போர்டு, சான்றிதழ் வழங்க மறுத்து மறு ஆய்வுக்கு பரிந்துரைத்தது. இதை எதிர்த்து, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இதனை விசாரித்த தனிநீதிபதி பி.டி.ஆஷா, உடனடியாக சென்சார் வழங்க உத்தரவிட்டு, மறுஆய்வு பரிந்துரையை ரத்து செய்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்த சென்சார் போர்டு, தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை பெற்றது.
இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 20ம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் தீர்ப்பு மீண்டும் தனி நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளதால் படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், ஜன நாயகன் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சென்சார் போர்டு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே, தற்போது ஜன நாயகன் திரைப்படம் தணிக்கை மறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. தணிக்கை வாரியத்தின் முடிவை ஏற்று படத்தை மறு ஆய்வு குழுவுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. இதனையடுத்து மறு ஆய்வுக்குழு திருத்திய படத்தை பார்ப்பார்கள்.
மறு ஆய்வுக்குழு 20 நாட்களில் படத்தை பார்த்து ஆலோசித்து திருத்தங்களை சொன்னபின் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, இன்னும் 10 நாட்களில் ஜன நாயகன் ரிலீஸ் தேதி தெரிந்துவிடும்.
சென்சார் சான்றிதழ் கிடைக்கும் நிலையில், அடுத்த மாதம், முதல் வாரத்தில் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


