தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகையின் கீழ், பெண்களின் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டு மகளிருக்கு ஸ்டாலின் அளித்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் அடிமையாக இருக்கக் கூடிய கூட்டமும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை காரணம் காட்டி, உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு.
பிப்., மார்ச், ஏப்., மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என மொத்தம் 5,000 ரூபாய், 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் இன்று காலை வரவு வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்.
திராவிட மாடல் 2.0ல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம். இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், அந்த வீடியோவில் பேசிய முதல்வர், ஆட்சிக்கு வருவதற்கு முன் மாதம் ரூ. 1000 உரிமை தொகை வழங்கப்படும் என அறிவித்தேன். அதன்படி, 1.31 குடும்பத் தலைவிகள் இந்த திட்டத்தில் பயன்பெறுகிறார்கள்.
பெண்களுக்கு எவ்வளவு சிரமம் என்பதை அறிவேன். எனவே தான் சிறப்பு மகளிர் உரிமைத் தொகையாக இன்று காலை 1.31 கோடி பெண்களின் வங்கி கணக்கில் ரூ.5000 வரவு வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வந்ததும் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


