அவையில் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும் எதிர்க்கட்சிகளிடம் பாரபட்சமாகவும் நடந்து கொள்வதாக கூறி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பதவி நீக்க தீர்மான நோட்டீசை சமர்ப்பித்தன. இதில், 118 எம்பிக்கள் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கி நடைபெற்றது. இதில், பிப்.1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இதையடுத்து நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து வந்தது. இதன் போது, மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேச அனுமதிக்காத விவகாரம் பெரும் சர்ச்சையானது.
இந்த விவகாரத்தில் சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து கேள்வி கேட்ட 8 எம்பிக்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, சபாநாயகர் ஓம் பிர்லா எப்போதுமே ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள், அவருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தன.
அதன்படி, மக்களவை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கவுரவ் கோகாய் உள்ளிட்டோர் சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவி நீக்கக் கோரி, அரசியலமைப்பின் 94சி பிரிவின் கீழ், தீர்மானத்திற்கான நோட்டீசை மக்களவை செயலாளரிடம் கடந்த செவ்வாயன்று வழங்கினர். இதில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள்,தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆர்ஜேடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 118 எம்பிக்கள் கையெழுத்திட்டிருந்தனர்.
இதனிடையே, கடந்த 13ம் தேதியுடன் (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவடைந்தது. மீண்டும் மார்ச் 9ம் தேதி இரு அவைகளும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாடாளுமன்ற விதிமுறைகளின்படி, மார்ச் 9ம் தேதி மக்களவை மீண்டும் கூடியதும் முதல் நாளன்று சபாநாயகருக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் அவையில் பரிசீலிக்கப்பட வேண்டும்.
அதன்படி, மார்ச் 9ம் தேதி அந்த தீர்மானம் மீதான விவாதமும் அதைத் தொடர்ந்து, வாக்கெடுப்பும் நடைபெறும் என்றார். விவாதத்தின் போது, சபாநாயகரின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விமர்சிப்பார்கள்.
மேலும், நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது, மிகவும் முக்கியமான மசோதா ஒன்றை அரசு தாக்கல் செய்ய உள்ளது. விவாதமின்றி தீர்மானம், மசோதாக்களை நிறைவேற்றுவோம் என அமைச்சர் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.


