தமிழ்நாடு சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இங்கு வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக அரசின் 2026 -27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று காலை 9.30 மணியளவில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
“எல்லார்க்கும் எல்லாம்” என்ற கொள்கை அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில், கல்வி, மகளிர் நலம், இளைஞர் மேம்பாடு, உள்கட்டமைப்பு துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அவரது உரையில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள்
• கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.31 கோடி மகளிர் பயன்பெற்று வருகின்றனர். சமீபத்தில் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான உரிமைத் தொகை ரூ. 3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ. 5,000 ஒரே தவணையாக மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
• அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா விடியல் பயணம் மூலம் மகளிர் இதுவரை 881 கோடி முறை பயணித்துள்ளனர். இதன் மூலம் ஒரு பெண்ணுக்கு மாதம் சராசரியாக ரூ. 888 வரை சேமிப்பு கிடைக்கிறது.
• பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் ரூ. 10 லட்சம் வரையிலான அசையாச் சொத்துகளுக்கு பதிவு கட்டணம் 1% குறைக்கப்பட்டுள்ளது. இந்த சொத்து வரிச் சலுகை மூலம் 3,71,705 பேர் இதுவரை பயனடைந்துள்ளனர்.
• இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு அதிகபட்சமாக ரூ. 48,534 கோடி மற்றும் உயர்கல்வித் துறைக்கு ரூ. 8,505 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
• நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 48 லட்சத்திற்கும் அதிகமான திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், மாணவர்கள் ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளுக்கு சென்று சர்வதேசப் பயிற்சிகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
• அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் கீழ் 6.95 லட்சம் பேரும், மாணவர்களுக்கு ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் 5.40 லட்சம் பேரும் மாதம் ரூ. 1,000 ஊக்கத்தொகை பெற்று வருகின்றனர்.
• 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்காக ரூ. 2,172 கோடி செலவிடப்பட்டுள்ளது.
• 19.34 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் காலை உணவுத் திட்டத்திற்காக கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 1,284 கோடி செலவிடப்பட்டுள்ளது.
• வரும் 2030ம் ஆண்டுக்குள் ‘குடிசைகள் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே 1 லட்சத்து 71 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், 2030ம் ஆண்டிற்குள் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
• தொழில்நுட்ப வளர்ச்சியை மாநிலம் முழுவதும் பரவலாக்க மதுரை, திருச்சி, சேலம், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
• அத்துடன் தஞ்சாவூர், வேலூர், கடலூர் போன்ற 2ம் நிலை நகரங்களில் ‘மினி டைடல் பூங்காக்கள்’ அமைப்பதன் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
• மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு ரூ. 1,471 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களின் மாதாந்திர பராமரிப்புத் தொகை ரூ. 1,500ல் இருந்து ரூ. 2,000 ஆக உயர்த்தப்பட்டதன் மூலம் 8.52 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர்.
• முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ. 5,463 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
• முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு 10,469 புதிய வீடுகள் கட்ட ரூ. 630 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
• அயலகத் தமிழர்களுக்கு ரூ.10 கோடியில் தமிழ் கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 8 பிற மாநிலங்கள் மற்றும் அயல் நாடுகளில் தமிழ் படிப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 42 நாடுகளில் 202 தொடர்பு மையங்கள் மூலம் இணையவழித் தமிழ் கல்வி வழங்கப்படுகிறது.
• தொழில் மற்றும் உள்கட்டமைப்புத் துறையில், ஒசூர், திண்டிவனம் உட்பட 12 இடங்களில் புதிய சிப்காட் வளாகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கான விரிவான அறிக்கை தயார் நிலையில் உள்ளது.
• சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ‘நெய்தல் மீட்சி இயக்கம்’ மூலம் 3,733 ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்திக் காடுகளை உருவாக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
• பண்பாட்டு ரீதியாக, கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகங்களைத் தொடர்ந்து தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகமும், சென்னையில் சிந்துவெளி நாகரிக அருங்காட்சியகமும் அமைக்கப்படவுள்ளன.
மேலும், தமிழகத்தின் பொருளாதாரத்தை இரட்டை இலக்க வளர்ச்சியில் கொண்டு செல்வதே இந்த பட்ஜெட்டின் நோக்கம் என்றும் அவர் இன்றைய தனது உரையில் தெரிவித்துள்ளார்.


