விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க இருக்கும் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூடுதல் தொகுதி, ஆட்சியில் அதிகாரம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருவதால் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே முடியும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அல்லது மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை இந்தியா கூட்டணியின் தலைவராக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா தற்போது வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியிட்டுள்ள கட்டுரையில், மத உணர்வுகளை முன்வைத்து அரசியல் நடத்தும் தற்போதைய மத்திய அரசை எதிர்கொள்ள, நாடாளுமன்றத் தேர்தல் வரும் வரை காத்திராமல் தெளிவானதொரு தலைமையின் கீழ் அணி திரள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
பாஜகவின் ஆதிக்கத்தை வீழ்த்த வேண்டுமானால், இந்தியா கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளின் தலைவர்கள், அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைய வேண்டும். மு.க.ஸ்டாலின் அல்லது மம்தா பானர்ஜி போன்ற வலிமையான தலைவரை இந்தியா கூட்டணியின் தலைவராக இப்போதே அறிவிக்க வேண்டும்.
மேலும், ராகுல் காந்தி தீவிர முயற்சிகள் எடுத்தாலும், காங்கிரஸ் கட்சிக்குள் மூத்த தலைவர்களிடையே நிலவும் மாறுபட்ட கருத்துக்கள் இந்தியா கூட்டணிக்கு பலவீனப்படுத்துகிறது. குறிப்பாக கேரளா, மே.வங்கம் மாநிலங்களில் இந்தியா கூட்டணிக் கட்சிகளே அவர்களுக்குள் மோதிக்கொள்வது பாஜகவிற்கே சாதகமாக அமையும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


