திமுக கூட்டணியில் தேமுதிக இன்று இணைந்துள்ளது. இதற்காக சென்னை அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலாயத்திற்கு சென்ற தேமுதிக பொதுச் செயலாளர் பிரமேலதா முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணியில் இணைந்துள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேமுதிக கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நல கூட்டணி, 2019ல் பாஜக கூட்டணி, 2021ல் அமமுகவுடன் கூட்டணி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது. இந்த 4 தேர்தல்களிலும் தேமுதிக தொடர் தோல்வியை சந்தித்தற்கு அதன் தவறான கூட்டணி முடிவே காரணம் என்று விமர்சிக்கப்பட்டது.
இந்த 4 தேர்தல்களில் தேமுதிகவினர் ஒருவர் கூட வெற்றி பெறாத நிலையில், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் சேர 50க்கும் மேற்பட்ட தேமுதிக மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.
தேமுதிகவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையிலும், அதிமுக, திமுகவுடன் தேமுதிக மறைமுக கூட்டணி பேரம் நடத்தி வந்தது. ஆனால் கூடுதல் தொகுதி பங்கீடு, ராஜ்யசபா சீட் ஒன்றும் கேட்டு நிர்பந்தித்து வந்ததால், கூட்டணி அமைப்பதில் இழுபறி நிலை நீடித்து வந்தது.
ஆனாலும், திமுக தரப்பில் அமைச்சர் எ.வ. வேலு, அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார். இதையடுத்து தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்தது.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, தேமுதிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் விருப்பப்படி திமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். கடந்த 2016 தேர்தலுக்கு பிறகு தாமதமாக இந்த கூட்டணி அமைந்துள்ளது. எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதை இரு கட்சிகளின் குழுவினர் பேசி முடிவெடுப்பார்கள். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அண்ணன் ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்தார்.
இதனால் தேமுதிகவை என்டிஏ கூட்டணியில் தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற பாஜகவின் எண்ணம் நிறைவேறாமல் தோல்வியில் முடிந்துள்ளது.


