நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தை கடந்த 2005ம் ஆண்டு தொடங்கி, 2006ம் ஆண்டு முதல் அக்கட்சி தேர்தலை சந்தித்து வருகிறது. திமுக-அதிமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்து வந்த தேமுதிகவில், கடந்த 2006ல் விருத்தச்சாலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார்.
இதைத் தொடர்ந்து, 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, தமிழகத்தில் உள்ள பாரம்பரிய கட்சியான திமுகவை பின்னுக்கு தள்ளி, எதிர்க்கட்சி அந்தஸ்த்தை பிடித்தது.
அதன்பிறகு, கடந்த 2016ல் மக்கள் நலக் கூட்டணி அமைந்து, விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்த தேர்தலிலும், அதையடுத்த வந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவுடனும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
மேலும், அக்கட்சியின் வாக்கு வங்கியும் அதன் தவறான கூட்டணி முடிவுகளால் சரியத் தொடங்கியது. இருப்பினும், விருத்தாசாலம், கடலூர், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, தருமபுரி உள்ளிட்ட வட தமிழ்நாட்டு மாநிலங்களில் தேமுதிகவுக்கு என்று தனி வாக்கு வங்கி இருப்பது மறுக்க முடியாத உண்மை.
கடந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் இத்தொகுதிகளில் திமுக ஏறக்குறைய 29 தொகுதிகளில் குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தது.
இத்தொகுதிகளில் குறைந்த பட்சமாக 2,000 ஓட்டுகள் முதல் 5,000 ஓட்டுகள் வரையிலும், அதிக பட்சமாக 10 ஆயிரம் முதல் 15 அல்லது 20 ஆயிரம் வாக்குகள் வரை பிரிக்கும் சக்திக்கு தேமுதிகவுக்கு இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த முறை 200 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் திமுக எந்த வாக்குகளையும் இழக்க விரும்பவில்லை.
இதனால், முடிவை அறிவிக்காமல் இருந்த தேமுதிக தலைமை அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், திமுக தரப்பிலும் அமைச்சர் எ.வ. வேலு பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தான், அக்கட்சியின் முரசு சின்னம் அங்கீகாரத்தை தக்க வைத்து கொள்ள குறைந்தபட்ச தேவையாக உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் என தேமுதிக தலைவர் பிரேமலதா பேரம் பேசியதாக தகவல்கள் கசிந்தன.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட திமுக, தேமுதிகவை தன் வலைக்குள் கொண்டு வந்து கூட்டணி அமைத்துள்ளது. இதனால் திமுக கூட்டணி வலுப்பெற்றுள்ளதுடன் மேலேக் குறிப்பிட்ட தொகுதிகளில் பாமகவிடம் இருந்து அக்கட்சியின் சமூக வாக்குகளை பிரிக்கும் தேமுதிகவுடன் கைகோர்த்து இருப்பது திமுக கூட்டணி வெற்றிக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.
திமுக தலைமைக்கு நெருக்கமான தனியார் நிறுவனம் நடத்திய சர்வே முடிவில், தேமுதிகவை இணைத்தால் கூடுதலாக 31 தொகுதிகள் வரை திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்தே இந்த இணைப்பு நடந்துள்ளது.
இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல்வரின் மருமகன் சபரீசன் மற்றும் அமைச்சர் எ.வ. வேலு இணைந்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை உறுதி செய்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவிற்கு 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை பதவி இறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


