வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று காலை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வந்த நிலையில், இன்று அதிகாலை தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் தென்காசி, திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


