நடிகரும் தவெக தலைவருமான விஜய்க்கும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட லண்டன் வாழ் தமிழ் பெண்மணியான அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக பிரச்சினை ஏற்பட்டு ஒரே வீட்டில் தனித்தனியாக வசிப்பதாக தகவல்கள் வெளியாகின.
சமீபத்தில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் விஜய், திரிஷாவை விட்டு வெளியே வரவேண்டும் என்று பேசியிருந்தார். இதற்கு அவரது கட்சியிலும், பொதுவெளியிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, நயினாரும் வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ள தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் மனைவி சங்கீதா தாக்கல் செய்த மனுவில், இங்கிலாந்து குடிமகளான தனக்கும் ஜோசப் விஜய் சந்திரசேகருக்கும் கடந்த 1998 ஜூலை 10ம் தேதி இங்கிலாந்தில் பதிவு திருமணம் நடந்தது. பின்னர், 1999 ஆகஸ்ட் 25ம் தேதி சென்னை எழும்பூர் ராஜா முத்தையா மன்றத்தில் இந்து முறைப்படி திருமணம் நடந்ததாகவும், இந்து மதத்தை சேர்ந்த தனக்கும் கிறிஸ்தவரான விஜய்க்கும் சென்னையில் நடந்த திருமணத்தின் பதிவு விவரங்களை தேவைப்படும் பட்சத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும், 1954ம் ஆண்டின் சிறப்பு திருமணச் சட்ட பிரிவுகளின் கீழ் ரத்து செய்து விவாகரத்து வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தொடக்கத்தில் திருமண உறவு அமைதியுடனும், ஒற்றுமையுடனும் இருந்ததாகவும், விஜய் வசதியான வாழ்க்கையை வழங்கியதாகவும், தான் வீட்டு பொறுப்புகள், குழந்தைகள் வளர்ப்பு மற்றும் கணவரின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.
சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் இதர விழாக்களுக்கு விஜய் அழைத்துச் செல்வார் என்று மனுவில் குறிப்பிட்டுள்ள சங்கீதா, கடந்த ஏப்ரல் 2021ல், விஜய் நடிகை ஒருவருடன் திருமண பந்தத்தை மீறிய உறவில் இருப்பது தெரிய வந்ததாகவும் இது பற்றி அவரிடம் கேட்ட போது, நடிகையுடனான உறவை முறித்துக்கொள்வதாக உறுதி அளித்த பின்னும் அதனை கைவிடவில்லை என்பதால் அவரது துரோக செயல் தனக்கு ஆழ்ந்த மன வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குழந்தைகளின் படிப்பு மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு இந்த விஷயத்தை தள்ளிப்போட்டுவிட்டதாகவும் தனது தாம்பத்திய உரிமை மறுக்கப்பட்டதாகவும் கூறியுள்ள சங்கீதா, ஒரே வீட்டில் இருவரும் தனித்தனியாக வாழும் நிலைக்கு தள்ளினார் எனவும் அதே நேரத்தில், விஜய் அந்த நடிகையுடன் வெளிநாடு பயணம், பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் என்று வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த மனுவில், அந்த நடிகையும் இந்த பயணங்களின் போது எடுக்கப்பட்ட போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த சமூக வலைதள பதிவுகளுக்கு விஜய் எந்த மறுப்போ, எதிர்ப்போ தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரவு தந்தார். இதனால் தானும், குழந்தைகளும் மிகுந்த அவமானத்துக்குள்ளானோம். அந்த நடிகையுடன் விஜய் வைத்திருந்த வெளிப்படையான தொடர்பு எனக்கு மனவேதனையையும், குழந்தைகளுக்கு அவர்களது நண்பர்கள் மற்றும் சமூக வட்டாரத்தில் பெரும் அவமானத்தையும் ஏற்படுத்தியது.
தேவையற்ற விளம்பரத்தைத் தவிர்க்கவும், அனைவரின் கண்ணியத்தை பாதுகாக்கவும், தற்போது நடிகையின் பெயரை வெளியிடவில்லை எனவும் தேவையெனில், விசாரணையின் போது அந்த நடிகையை இந்த வழக்கில் சேர்க்க நீதிமன்றம் அனுமதிக்கும்படியும் கோரியுள்ளார்.
விஜயுடனான திருமண உறவு முற்றிலும் சிதைந்து, இனி மீட்க இயலாத நிலை உள்ளதாகவும் தொடர் மன வேதனை, அவமானம் மற்றும் துன்பமாக மாறிய திருமண உறவை இனியும் தன்னால் தொடர முடியாது என்றும் அந்த மனுவில் கூறியுள்ளார்.
மேலும், அவரது வருமானம், சமூக அந்தஸ்தை கருத்தில் கொண்டு நேர்மையான மற்றும் நியாயமான, நிரந்தர ஜீவனாம்சத்தை அளிக்க கணவரான விஜய்க்கு உத்தரவிட வேண்டுகிறேன். வழக்கு செலவுகள் முழுமையையும் விஜய் தரவும் உத்தரவிட வேண்டும்.
கவுரவமாக பிரிந்து வாழ முயற்சித்து இரு முறை அவருடன் பேசினேன். கடைசியாக கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி அவருடன் பேசினேன். அப்போதும், இருவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சுமுக தீர்வு ஏற்படவில்லை. இதனால், வேறு வழியின்றி இந்த விவகாரத்து மனுவை தாக்கல் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பத்தின் மதிப்பு, மரியாதையை பாதுகாக்கும் வகையில் இந்த வழக்கின் விசாரணையை முழுமையாக ரகசியமாக நடத்துபடியும் இல்லையென்றால் தானும் குடும்பத்தினரும் மேலும் அவமானத்திற்கும் மனவேதனைக்கும் ஆளாவோம் என்றும் மனுவில் சங்கீதா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே, கடந்த பிப். 24ம் தேதி செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்த இந்த விவாகரத்து மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் தற்போது காலூன்றி இன்னும் முதல் தேர்தலை சந்திக்காத விஜய்க்கு, இந்த விவகாரத்து மனு அவரது அரசியல் வாழ்க்கைக்கு பெரும் சறுக்கலாக, பின்னடைவாகவேப் பார்க்கப்படுகிறது.


