தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ளன. இதனால் கட்சிகள் கூட்டணி வேலைகளிலும், பிரசாரங்களிலும் தீவிரமாய் ஈடுபட்டுள்ளன. மேலும், கட்சிகள் ஒன்றொடு ஒன்று போட்டிபோட்டு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளித் வீசுகின்றன.
அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின், கடந்த மாதம் மகளிர் உரிமைத் தொகை கணக்கில் மொத்தமாக ரூ.5,000 வரவுவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதில் பிப்., மார்ச், ஏப்., மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000, கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2000 என மொத்தம் ரூ.5000 வரவுவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அதிமுகவும் ஆட்சி அமைத்தால் சிறப்பு தொகையாக ரூ.10,000 வழங்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்தார்.
இச்சூழலில் தற்போது புதிய அறிவிப்பாக அரசு உதவித்தொகை பெற்றுவரும் முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகளின் வங்கி கணக்கில் கூடுதலாக ரூ.2,000 வரவுவைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என மொத்தம் 29 லட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும், 5 லட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 லட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில், சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன. நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம். நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.


