தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக தரப்பில் டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் குழு தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கடந்த 23ம் தேதி தொடங்கிய பேச்சுவார்த்தையில், தற்போது வரை ஐயூஎம்எல் மற்றும் மமக கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. முஸ்லீம் லீக் ஏணி சின்னத்திலும், மமக உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகின்றன.
அந்த வகையில், திமுக – காங். இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் காரணமாக திமுக – காங். கூட்டணிக்குள் இழுபறி நீடித்து வந்த சூழலில் இந்த ஆலோசனை நடைபெற்றது.
இதன்போது, காங். சார்பில் 39 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
காங்கிரஸ் கட்சி, முன்பு முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபோது 41 சட்டப்பேரவைத் தொகுதிகள் + 1 மாநிலங்களவை சீட் கேட்டு வலியுறுத்தி இருந்தது. இருப்பினும், தேமுதிக, மநீம உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி வருகையினால் தற்போது அந்த எண்ணிக்கையை குறைக்க முன்வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, காங்கிரசுக்கு 25 + 1 தொகுதிகள் வழங்க திமுக தரப்பு தயாராக இருப்பதாகவும், இரு கட்சிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அறிவாலாய தரப்பில் பேசப்படுகிறது.
ஆனால், கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது தற்போதைய கூட்டணியில் தேமுதிக, மநீம உள்ளிட்ட புதிய கட்சிகள் இணைந்துள்ளதால், அவர்களுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக திமுக தரப்பில் விளக்கப்பட்டும் காங்கிரஸ் பிடி கொடுக்காமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதற்கு காங்கிரஸ் குழுவினரோ, கடந்த முறையே, கூட்டணி நலன் கருதித்தான், கட்சியினரை சமாதானப்படுத்தி 25 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டோம், குறைவான தொகுதிகளில் போட்டியிட்டால் இங்கு கட்சியை வளர்க்க முடியாது. இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பதாக திமுக குழு கூறியுள்ளது.
இழுபறி சூழலில் காங்கிரஸ் கட்சி கேட்கும் சீட் எண்ணிக்கையை குறைக்காமல் பிடிவாதமாக இருப்பதால் எந்த முடிவுக்கும் தயார் நிலையில் ஸ்டாலின் இருப்பதாக அறிவாலய வட்டாரத்தில் கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு வழக்கமாக நெருக்கமான விளிப்போடு சகோதரர் என அழைக்கும் ராகுல் காந்தி அந்த வார்த்தையை குறிப்பிடாமல் வாழ்த்து தெரிவித்திருப்பதும் அதே பாணியில் முதல்வர் ஸ்டாலின் சம்பிரதாய பதில் அனுப்பியதும் அரசியல் அரங்கில் தற்போது விவாதப் பொருளாகி உள்ளது.
இந்நிலையில், திமுகவுடன் நடைபெற்று வரும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தவெகவை புதிய கட்சி எனக் குறைத்து மதிப்பிட முடியாது. இளைஞர்கள் மத்தியில் தவெகவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், தமிழகத்தில் காங். கட்சியின் வலிமையையும், ராகுல் காந்தியின் தாக்கத்தை அவர்களும் உணர்ந்து வருகின்றனர் எனக் கூறியுள்ளார்.
இது திமுகவை சீண்டும் வகையில் அமைந்துள்ளதால், இனி கூட்டணியில் நீடிப்பதும் விலகுவதும் காங்கிரஸ் கட்சியின் கைகளில் தான் இருக்கிறது என்று கெடுபிடியுடன் திமுகவும் மறைமுகமாக கூறியுள்ளதாகத் தெரிகிறது.
ஒருவேளை, காங்கிரஸ் மேலிடம் தவெக கூட்டணி என்ற முடிவை எடுத்தால், தமிழக காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபடக் கூடும் நிலை இருப்பதாகவே தெரிகிறது.


