தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மே.வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை பதவிகளுக்கு மார்ச் 16ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் பிப். 26ஆம் தொடங்கியது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் (மார்ச் 5) நிறைவடைகிறது. வரும் 16ம் தேதி நடத்தப்பட்டு, அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
இத்தேர்தலில் மகாராஷ்டிராவில் இருந்து 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், தற்போது இருக்கும் எம்எல்ஏ.க்களின் அடிப்படையில் 4 உறுப்பினர்களை பாஜக தேர்வு செய்ய இருக்கிறது. அதே போல், சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்., (அஜித்பவார்) கட்சிகள் தலா ஒரு உறுப்பினரை தேர்வு செய்ய முடியும்.
ஆனால், எதிர்க்கட்சிகளால் ஒரு உறுப்பினரை மட்டும் தேர்வு செய்ய முடியும். எதிர்க்கட்சி கூட்டணியில் அந்த ஒரு இடம் யாருக்கு என்பதில் தான் தற்போது குழப்பம் நீடிக்கிறது.
அந்த ஒரு இடம் தங்களுக்கு வேண்டும் என உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் கூறி வருகின்றன. இது தொடர்பாக மகாராஷ்டிரா காங். பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா உத்தவிடம் நேரடியாக பேசியுள்ளார்.
அப்போது, தேசிய நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கும்படியும், கைமாறாக, அடுத்த மாதம் காலியாகும் உத்தவ் தாக்கரேயின் சட்டமேலவை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் அவரைத் தேர்ந்தெடுக்க ஆதரவு கொடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
அதேபோல், சரத் பவார் மகள் சுப்ரியா சுலே உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசி இருக்கிறார். ஆனால் இவ்விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மற்றொரு புறம், உத்தவ் தாக்கரே கட்சி எம்பி சஞ்சய் ராவுத் ராஜ்யசபை தேர்தலில் சரத்பவார் போட்டியிடுவார் என்று அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
மாநிலங்களவையில் தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். இந்த பதவியை காங்கிரஸ் தக்க வைத்துக்கொள்ள மொத்தமுள்ள உறுப்பினர்களில் 10% (25 உறுப்பினர்கள்) பெற்றிருக்க வேண்டும்.
மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 உறுப்பினர்களில், காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 27 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதில் மூத்த எம்.பி.க்களான அபிஷேக் மனு சிங்வி, ரஜ்னி பாட்டீல், பூலோதேவி நேதம், கே.டி.எஸ். துளசி ஓய்வு பெறுவதால், காங்கிரஸின் பலம் 10 சதவீதத்துக்கும் கீழே போகக் கூடும்.
ஒரு இடத்தை இரண்டு கட்சிகளும் கேட்பதால் உத்தவ் தாக்கரே பெரும் குழப்பத்தில் உள்ளார். காங்கிரஸ் கட்சியின் கனவு கை கூடுமா என்பது உத்தவின் முடிவில் தான் உள்ளது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


