தமிழ் திரையுலகின் உச்ச நடிகரும் தவெக தலைவருமான விஜய்க்கும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட லண்டன் வாழ் தமிழ் பெண்மணியான அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக பிரச்சினை ஏற்பட்டு ஒரே வீட்டில் தனித்தனியாக வசிப்பதாக தகவல்கள் வெளியாகின.
சமீபத்தில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் விஜய், திரிஷாவை விட்டு வெளியே வரவேண்டும் என்று பேசியிருந்தார். இதற்கு அவரது கட்சியிலும், பொதுவெளியிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.
நடிகை திரிஷாவும் தனக்கும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தொடர்பில்லை என்று அவரது வழக்கறிஞர் மூலம் கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, நயினாரும் வருத்தம் தெரிவித்தார்.
இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக சங்கீதா பொது நிகழ்ச்சிகளில் தென்படாததால் சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவின. அவர் தனது குழந்தைகளின் கல்வி மற்றும் வெளிநாட்டுப் பணிகள் நிமித்தமாக அங்கேயே தங்கியிருப்பதாக குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறி வந்த நிலையில்தான், கடந்த மாத இறுதியில் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கண்ணியம் கருதி நடிகையின் பெயரைக் குறிப்பிடாமல் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்ததாகவும், அதனை கண்டுபிடித்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், ஒரே வீட்டில் இருந்தாலும் 2021ம் ஆண்டு முதல் தனித்தனியாக வாழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த உறவை முறித்துக்கொள்வதாக கூறிய பின்னரும், விஜயின் நடவடிக்கையில் மாற்றம் இல்லையென்றும் அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் தனக்கான உரிமைகளை நிறுத்திய விஜய், கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட நடிகை விஜய் உடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது தன்னையும் குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை திருவான்மியூரில் கல்பாத்தி அகோரம் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான கல்பாத்தி சுரேஷ் மகனின் திருமண விழா நடந்தது.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நடிகரும் தவெக தலைவருமான விஜய், நடிகை திரிஷாவுடன் ஒரே காரில் சென்று பங்கேற்றுள்ளார். இருவரும் ஒரே வண்ண உடை அணிந்து ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர். விஜய் பட்டு வேட்டி, சட்டையும், திரிஷா பட்டுப் புடவையும் அணிந்து இருந்தனர். இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், விஜய், திரிஷா இருவரும் ஒன்றாக கலந்துகொண்டது திரையுலகில் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பேசுபொருளாகி உள்ளது.


