ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா படைகள் இணைந்து நடத்தும் கூட்டுத் தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்த ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது.
இதனால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் வினியோகம் தடைபட்டுள்ளதால், உலகளவில் எரிபொருள் விநியோகம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
இதனிடையே, இந்தியாவை பொறுத்தவரை 3 வாரத்திற்கு தேவையான கச்சா எண்ணெய், எரிபொருள் இருப்பு உள்ளதாகவும், விலையேற்றத்துக்கு வாய்ப்பு இருக்காது எனவும் மத்திய அரசு கூறி வந்த நிலையில், போர் சூழலை பயன்படுத்தி, நள்ளிரவு முதல் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளது.
அதன்படி, வீட்டு உபயோகத்துக்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்து ஒரு சிலிண்டர் ரூ.928.50க்கும், வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.114.50 உயர்ந்து ஒரு சிலிண்டர் ரூ.2,043.50க்கும் விற்கப்படுகிறது.
இந்நிலையில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் எதுவும் மூடப்படவில்லை என்று விளக்கம் அளித்துள் மத்திய அரசு, மறுபுறம் இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், எல்பிஜி உற்பத்திக்கு தேவையான புரொஃபேன், பியூட்டேன் போன்ற வாயுக்களை வேறுவித பயன்பாடிற்கு வழங்க கூடாது எனவும், உற்பத்தியாகும் அனைத்து வாயுக்களையும் ஐஓசி, எச்பிசிஎல், பிபிசிஎல் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய் விநியோகம் மேலும் பாதிக்கப்படும் நிலையில், பண வீக்கம் அதிகரிப்பதுடன் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விலை உயரக் கூடும் எனவும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
