சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், டி.ஆர்.பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட திமுக குழு, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.
அந்த வகையில், ஐயூஎம்எல், மமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளது.
அதன்படி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் 12 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாக தகவல் வெளியானது. ஆனால் மாநிலங்களவை சீட் வழங்கியுள்ளதாலும், கூட்டணியில் ஏற்கெனவே பல கட்சிகள் இணைந்திருப்பதையும் மேலும் சில கட்சிகள் இணைய உள்ளதையும் குறிப்பிட்டு, 2 தொகுதிகள் வழங்க திமுக முன்வந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், கமல்ஹாசன் தலைமையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மநீம கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசனிடம், ஆலோசனைக் குறித்தும், தொகுதி பங்கீடு, போட்டியிடும் சின்னம் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்து அவர் கூறிய போது, கூடுதல் தொகுதிகள் குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். திமுகவின் அழைப்பிற்காக காத்திருக்கிறோம். தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய தயாராக இருக்கிறோம்.
மநீம சின்னத்திலா அல்லது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.
