ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்.28ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவரது மனைவி, மகள், மருமகன், பேரக்குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினரும், ராணுவத் தலைவர்களும் கொல்லப்பட்டனர். மேலும், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்த தாக்குதல் இன்றுடன் 13வது நாளாக நீடிக்கிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் கடும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் தாக்குதலுக்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இப்போரினால், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள் பயணிக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கி உள்ளது. இதனால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால், இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்திருந்தது. இதனால் பிற நாடுகளுக்கு எண்ணெய் கொண்டு செல்வது முற்றிலும் தடைபட்டுள்ளது. இந்தியாவில் இயற்கை எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வணிக நிறுவனங்களுக்கான எரிவாயு சிலிண்டர் வினியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் கடுமையாக குற்றம்சாட்டினர்.
மேலும், அமெரிக்காவிடம் சரணடைந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை குறைத்ததே தட்டுப்பாட்டிற்கு காரணம் எனவும் கடுமையாக சாடினர்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதன் போது பேசிய ராகுல் காந்தி, எரிவாயு தட்டுபாடு குறித்து பீதியடைய தேவையில்லை என்று பிரதமர் கூறுகிறார். ஆனால் அவரே முற்றிலும் மாறுபட்ட காரணங்களுக்காக பீதியடைந்துள்ளார். அதானி வழக்கு, எப்ஸ்டீன் கோப்புகள் காரணமாக அவர் பீதியடைந்துள்ளார். அவரால் நாடாளுமன்ற அவைக்குள் வர முடியவில்லை. அவரே பீதியடைந்திருக்கும்போது, நாட்டை பீதி அடைய வேண்டாம் என்று கூறுவதாகத் தெரிவித்தார்.


