ஐபிஎல் 2026 முதல் 20 நாட்களுக்கான அட்டவணையை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா நேற்று முன்தினம் வெளியிட்டார். தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இந்த முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, வரும் 28ம் தேதி முதல் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியும், ஐதராபாத் அணியும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதுகின்றன.
இந்த நிலையில், புதிய ஐபிஎல் 2026க்கான புதிய பயிற்சி வழிகாட்டுதல்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஓர் அணி பயிற்சி முடித்த ஆடுகளத்திலோ அல்லது வலைப்பயிற்சி மேற்கொள்ளும் இடத்திலோ மற்றொரு அணி பயிற்சி செய்யக் கூடாது. ஒவ்வோர் அணியின் பயிற்சிக்கும் புதிய ஆடுகளங்கள் தயாரிக்கப்பட வேண்டும். இரண்டு அணிகள் அடுத்தடுத்தோ அல்லது ஒரே நேரத்திலோ பயிற்சி மேற்கொண்டாலும், தனித்தனி வலைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ஓர் அணி அதன் பயிற்சியை முன்கூட்டியே முடித்துவிட்டாலும், அந்த இடத்தை அடுத்த அணி பயன்படுத்தக் கூடாது. இந்த சீசனில் பிசிசிஐயின் முன் அனுமதி பெற்று பின்னரே, ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 2 பயிற்சிப் போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும். இந்தப் போட்டிகள் முக்கிய ஆடுகளத்தில் அல்லாமல், மைதானத்தின் ஓரத்தில் உள்ள பக்கவாட்டு ஆடுகளங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓர் அணிக்கு ஆடுகளம் சாதகமாக மாறிவிடுவதைத் தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பயிற்சி போட்டிகளை நடத்துவதற்கும் பிசிசிஐ கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இரவு நேரத்தில் மின் விளக்குகள் ஒளியில் பயிற்சிப் போட்டிகளை நடத்தினால், அது மூன்றரை மணி நேரத்திற்கு மேல் நீடிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தவிர, மைதானத்தின் முக்கிய ஆடுகளத்தைப் போட்டிக்காகத் தயாரிக்கும் பணிகளுக்காக, உள்ளூர் அணியின் முதல் போட்டி தொடங்குவதற்கு முந்தைய 4 நாட்களில் அந்த மைய ஆடுகளத்தில் எந்தப் பயிற்சியும் அல்லது பயிற்சிப் போட்டியும் நடத்தக் கூடாது. இந்தக் காலகட்டத்தில் பயிற்சி தேவைப்பட்டால், மாநில கிரிக்கெட் சங்கம் அணிக்கு மாற்று மைதானத்தை இலவசமாக ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும், பயிற்சி நேரத்தைப் பொறுத்தவரை உள்ளூர் அணிக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2 அணிகள் ஒரே நேரத்தை ஒதுக்கக் கோரினால், அணி மேலாளர்கள் பேசி முடிவெடுக்க வேண்டும். அவர்களால் சுமூகமான முடிவை எட்ட முடியாவிட்டால், பிசிசிஐ தலையிட்டு இரு அணிகளுக்கும் நேரத்தைச் சமமாகப் பிரித்து வழங்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவிர, மார்ச் 16ம் தேதி முதல், அணிகளுக்கு இரண்டு பயிற்சி வலைகளும், பந்துகளை அதிரடியாக அடித்துப் பழகுவதற்கான ஒரு தனிப்பட்ட ஆடுகளமும் மைதானத்தின் ஓரத்தில் ஒதுக்கப்படும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.


