மத்திய கிழக்கு நாடுகள் இடையேயான போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற முக்கிய காரணங்களால் இந்த வாரத் தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் சரிவுடன் காணப்பட்டன. இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்தது.
வாரத்தின் தொடக்க நாளான திங்களன்று (மார்ச் 9) சென்செக்ஸ் சுமார் 2,400 புள்ளிகள் வரை சரிந்ததால், முதலீட்டாளர்களுக்கு ரூ.12 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. அதே போன்று, நிஃப்டி குறியீடு 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்து, 23,800க்கு கீழே வர்த்தகமானது.
இந்நிலையில், வாரத்தின் கடைசி நாளான இன்று சென்செக்ஸ் 1,470 புள்ளிகள் சரிந்து 74,563 என்ற அளவில் நிறைவடைந்தது. இந்த வாரம் மட்டும், சென்செக்ஸ் 4,350 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதே நேரம், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 489 புள்ளிகள் சரிந்து 23,152 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
மெட்டல், ஆட்டோ மொபைல் மற்றும் வங்கித் துறை பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் பெரும் சரிவைச் சந்தித்தன. நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களின் பங்குகளை உள்ளடக்கிய மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகளும் தலா 2.5% சரிவடைந்தன. இதனால் இன்று மட்டும் முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
போர் பதற்றத்தினால், அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் 24 காசுகள் சரிந்து 92 ரூபாய் 25 காசுகளாக நிலைபெற்றது.
மேலும், ஏற்றுமதியான 3.50 கோடி முட்டைகள் அரபு நாடுகளை சென்றடைய முடியாமல் கடந்த 12 நாட்களாக நடுக்கடலிலேயே முடங்கியுள்ளன. அதே போல், திருப்பூரில் ரூ.2,500 கோடி மதிப்பிலான பின்னலாடைகள் தேக்கம் அடைந்துள்ளது.


