தமிழ் திரையுலகின் உச்ச நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய பின்னர் மாவட்டம் வாரியாக பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார்.
கரூரில் கடந்தாண்டு செப். 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின்பேரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணைக்காக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் கடந்த ஜன.12 மற்றும் ஜன.19 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜரானார். அப்போது முதல்முறை அவரிடம் சுமார் 6 மணி நேரமும், 2வது முறை சுமார் 7 மணி நேரமும் அதிகாரிகள் விசாரித்தனர்.
அப்போது கூட்டத்துக்கு தாமதமாக வந்தது ஏன், பாதுகாப்பு ஏற்பாடுகளில் நடந்த குளறுபடிகள் குறித்து விஜயிடம் விசாரிக்கப்பட்டதாகவும், 2வது முறை ஆஜரான போது, விஜய்யின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட உள்ளதாகவும் அவர் கைதாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் விசாரணை முடிந்து அவர் மீண்டும் சென்னை திரும்பினார்.
இந்நிலையில், விஜய் மார்ச் 10ம் தேதி சிபிஐயில் ஆஜராகும்படி 3வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. விஜய் தரப்பில், சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வேட்பாளர் நேர்க்காணல் உள்ளிட்ட பணிகள் இருப்பதால் 15 நாட்கள் கால அவகாசமும் டெல்லிக்கு பதிலாக சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராக அனுமதி அளிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் விஜயின் கோரிக்கையை நிராகரித்த சிபிஐ மார்ச் 15 விசாரணைக்கு ஆஜராகும்படி மீண்டும் சம்மன் அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து, தனி விமானம் மூலமாக டெல்லி சென்ற விஜய் சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து காரில் நின்றபடி வெளியே வந்த தவெக தலைவர் விஜய் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை நோக்கி கையசைத்தவாறு அங்கிருந்து சென்னை திரும்புவதற்கு புறப்பட்டார்.


