தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மே.வங்கம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைப் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய இருக்கும் நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழு இம்மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டது.
இக்குழுவானது அம்மாநிலங்களின் அரசு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் தேர்தல் தயாரிப்பு நிலை, தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டது.
இதனைத் தொடர்ந்து, 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேற்று வெளியிட்டார்.
அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில், நடிகரும் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஸை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார்.
அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், தற்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் வருங்காலத்தில் முதல்வராகவும் இருக்கும் இபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். தங்களது தரப்பு கருத்துகளை எடுத்துக் கூறியுள்ளோம் என்று தெரிவித்தார்.
எந்த தொகுதி, எந்த மாவட்டம் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அவரவருக்கு உள்ள பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும் கடந்தமுறை தனித்து போட்டியிட்ட நிலையில், இம்முறை அதிமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் நல்ல முடிவை எதிர் நோக்கி இருப்பதாகவும் பதிலளித்தார். மேலும், பிரச்சாரத்தின் போது ஏவுகணைகளும் எறிகுண்டுகளும் பாயும் என்றும் அவர் கூறினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ம் தேதி தொடங்கவுள்ளது. வேட்புமனு தாக்கல் கடைசி நாள் ஏப்.6 தேதியும், வேட்புமனு பரிசீலனை ஏப்.7ம் தேதியும் வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் ஏப்.9 ஆகும்.


