மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தினால், கச்சா எண்ணெய் விலை உயர்வு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, உலக பங்குச் சந்தை சரிவு ஆகியவற்றின் தாக்கத்தினால் தங்கத்தின் விலை உயரும் என்று கணிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்தச் சூழலில், கடந்த 14ம் தேதி சவரனுக்கு ரூ.1,120, 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் சந்தை விடுமுறை, 16ம் தேதி ரூ.400, 17ம் தேதி ரூ. 480 என 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு மொத்தம் ரூ.2,000 வரை சரிந்துள்ளது.
வாரத்தின் முதல் நாளான நேற்று சந்தையில் தங்கம் சவரனுக்கு ரூ.400, கட்டி வெள்ளி ரூ.4,000 விலை குறைந்தது.
இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து சவரன் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 200க்கும் கிராமுக்கு ரூ.60 குறைந்து கிராம் ரூ.14,650க்கும் விற்பனையாகிறது.
சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.280க்கும், கிலோவுக்கு ரூ.4,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தில் முதலீடு செய்வதை சர்வதேச முதலீட்டாளர்கள் குறைத்துள்ளதால், தங்கம் விலை குறைந்து வருவதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதே நேரம், திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்காக நகை வாங்க வேண்டிய கட்டாய சூழலில் உள்ளோர் தங்கம் விலை இன்னும் சற்று குறையுமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.


