தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மே.வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேற்று முன்தினம் அறிவித்தார்.
அதன்படி, புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் ஏப்.9ம் தேதியும் தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
ஆனால், . மே.வங்கத்தில் மட்டும் ஏப்.23ம் தேதி முதல் கட்டத் தேர்தலில் 152 தொகுதிகளுக்கும் ஏப்.29ம் தேதி 2ம் கட்டத் தேர்தலில் 142 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து, இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
இதனிடையே, கேரளத்தில் 47 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, பாஜகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், 294 தொகுதிகளைக் கொண்ட மே. வங்கத்தில் முதல் கட்டமாக 144 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. அதன்படி, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரி நந்திகிராம், பபானிபூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளார்.
சுவேந்து அதிகாரி, கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
இதனால், தற்போது மம்தா பானர்ஜி எம்எல்ஏ.வாக உள்ள பபானிபூர் தொகுதியிலும் சுவேந்து அதிகாரியை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது.
மே.வங்கத்தில் கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 10.63% வாக்கு வங்கியுடன் 3 தொகுதிகளைக் கைப்பற்றிய நிலையில், கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 38.1 வாக்கு சதவீதத்துடன் 77 இடங்களில் வென்றது.
இதனால் இம்முறை அங்கு ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டி வருவதால், திரிணாமுல் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் இருமுனைப் போட்டி நிலவுகிறது.


