தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை உடனடியாக வெளியிடுதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தவெக சார்பில் கடந்த 13ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒருபகுதியாக, சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பிறகு பிரபலமான தலைவராக ரஜினி அரசியலுக்கு வர நினைத்தார். திமுக குடும்பம் அவருக்கு மிரட்டல் விடுத்து அரசியலுக்கு வராமல் பார்த்து கொண்டதாக விமர்சித்திருந்தார்.
அவரது இத்தகையப் பேச்சினால் கோபமடைந்த ரஜினி ரசிகர்கள், இதற்கு எதிராக தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.
தமிழக அமைச்சர் ரகுபதி, ரஜினியை யாராலும் மிரட்ட முடியாது. அவர் யாருடைய மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டார் எனவும் ரஜினியின் ஆளுமையை கொச்சைப்படுத்தக் கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவனும் தெரிவித்திருந்தனர்.
அதே போல், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான இபிஎஸ் அவரது எக்ஸ் பக்கத்தில் அரசியலைக் கடந்து எல்லோராலும் மதிக்கப்படும் திரை ஆளுமை ரஜினிகாந்த் எனவும், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்ற அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவெக தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் அவதூறாகப் பேசியிருப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில், ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் தன்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.
அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, தனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, தொல்.திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, நண்பர் அண்ணாமலை, அர்ஜுனமூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், ஜி. தனஞ்செயன், திரையுலக நண்பர்கள், நக்கீரன் கோபால், சாணக்கியா ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், தன்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகப் பதிவிட்டுள்ளார்.
மேலும், காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்று கூறியுள்ளார்.


