தமிழ் திரையுலகில் ரவி மோகன் (ஜெயம் ரவி) நடிப்பில் வெளியான `கோமாளி’ படம் மூலம் கடந்த 2019ம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.
அதன் பின்னர், இயக்குநராக இருந்த அவர் நடிகராக வலம் வரத் தொடங்கினார். அவரது லவ் டுடே',டிராகன்’, `ட்யூட்’ படங்கள் மூலம் ஹீரோவாக வரவேற்பைப் பெற்றார்.
இந்த வரிசையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடிப்பில் உருவான `லைக்’ (LIK – லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இப்படம் முதலில் கடந்தாண்டு செப்.18ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தீபாவளி வெளியீடாக பிரதீப் நடித்த ட்யூட்' படம் அக்.17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரே நடிகர், அதுவும் வளர்ந்து வரும் நடிகரின் படத்தை அடுத்தடுத்த மாதங்களில் எப்படி வெளியிடுவது என யோசித்துக் கொண்டிருக்கும் போதேலைக்’ படமும் அக்.17 ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த 3 படங்களின் தயாரிப்பு நிறுவனங்களும் பேச்சுவார்த்தை நடத்தியதன் பலனாக ட்யூட்' மட்டும் வெளியானது. இதையடுத்துலைக்’ படம் டிச.18 வெளிவரும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அதன் பிறகு, காதலர் தினத்தன்று பிப்.14ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வரை இப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய வேறு எந்த தகவலும் இல்லை.
இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்ட்டா ஸ்டோரியில் “சினிமாவில் உள்ள அனைவரும் ஒரு வெள்ளிக்கிழமை அனைத்தையும் மாற்றிவிடும் என்று கூறுவதுண்டு. ஏப்ரல் 3. அப்படியான நல்லதொரு வெள்ளிக்கிழமையாகுமா?” எனப் பதிவிட்டுள்ளார்.
ஒருவேளை இது அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள `லைக்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த பதிவாக இருக்கும் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இப்படத்தின் திரைக்கதை 2040ம் ஆண்டில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளதால் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


