தமிழ்நாடு உள்ளிட்ட5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்ததில் இருந்து, அம்மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இருப்பினும், பாஜக கூட்டணி ஆட்சி இல்லாத தமிழ்நாடு, கேரளா, மே.வங்கம் ஆகிய 3 மாநிலத் தேர்தல்களே பெரும் கவனம் பெற்றுள்ளது.
மே.வங்கம் 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுடன் நாட்டிலேயே அதிக தொகுதிகளைக் கொண்ட 2வது மாநிலமாக உள்ளது. இங்கு ஏப்.23 மற்றும் ஏப்.29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸும், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் பாஜகவும் கடுமையான போட்டியில் உள்ளன.
மத்திய பாஜக அரசை கடுமையாக சாடி வரும் முதல்வர்களில் மம்தா பானர்ஜியும் ஒருவராவார். இவர் கடந்த 2011ம் ஆண்டு முதல் அம்மாநில முதல்வராக தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளார்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் 144 இடங்களுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக கடந்த 16ம் தேதி வெளியிட்டது. இதில், 2020 வரை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக இருந்து பிறகு பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி மற்றும் திலீப் கோஷ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் போட்டியிடுகின்றனர். முதல்வர் மம்தா பானர்ஜியின் தொகுதியான பபானிபூர் மற்றும் நந்திகிராம் ஆகிய 2 தொகுதிகளில் சுவேந்து அதிகாரி நிறுத்தப்பட்டுள்ளார்.
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியான மறுநாள் (மார்ச் 17) திரிணாமுல் காங்கிரஸ் 291 தொகுதிகளுக்கான அதன் வேட்பாளர்களை அறிவித்தது. மூன்று தொகுதிகளை மட்டும் அதன் கூட்டணிக் கட்சியான பிஜிபிஎம்க்கு விட்டுக்கொடுத்துள்ளது.
இதில், சுவேந்து அதிகாரியை எதிர்த்து பபித்ரா கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சுவேந்து அதிகாரியின் நெருங்கிய உதவியாளராக இருந்து வந்த பபித்ரா கர், கடந்த 2020ல் சுவேந்து அதிகாரியுடன் சேர்ந்து பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில், கடந்த 16ம் தேதி பாஜகவில் இருந்து விலகிய பபித்ரா கர் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். அவர் இணைந்த மறுநாளே, வேட்பாளர் பட்டியலில் நந்திகிராம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தாவிடம் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியை மம்தாவை எதிர்த்து போட்டியிடச் செய்து பாஜக வெற்றி பெற வைத்தது.
தற்போது, பாஜகவை பழிவாங்கும் வகையில், பாஜகவின் உத்தியை 2026 தேர்தலில் மம்தா கையில் எடுத்துள்ளார். மம்தா தொகுதி முடிவு கவனம் பெறும் அதே அளவிற்கு சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியும் கவனம் பெற்றுள்ளது.
இந்த முறை திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில், பாலினம் மற்றும் சமூகப் பிரிவுகள் அனைத்திற்கும் முக்கியத்துவம் அளித்துள்ளது. அதன்படி, 53 பெண் வேட்பாளர்கள், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் 95 வேட்பாளர்கள், சிறுபான்மை சமூகங்களிலிருந்து 48 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
மேலும், ஆட்சிக்கு எதிரான மனநிலையைச் சமாளிக்க அக்கட்சி பதவியில் இருக்கும் 74 சிட்டிங் எம்எல்ஏ.களுக்கு இம்முறை வாய்ப்பளிக்கப்படவில்லை. வேட்பாளர் பட்டியலில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சோஹம் சக்ரவர்த்தி, ஐபிஎஸ் அதிகாரி பிரசுன் பானர்ஜி, திரி.காங். மூத்த தலைவர் மதன் மித்ரா, நடிகை சயந்திகா பானர்ஜி, பாடகி அதிதி முன்ஷி, ஜர்னா சர்தார், பிரபல திரைப்பட இயக்குநர் ராஜ் சக்ரவர்த்தி, நடிகை லவ்லி மைத்ரா, கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், முன்னாள் மாநிலங்களவை எம்.பி. ரிதாபிரதா பானர்ஜி, மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜியின் மகன் ஷிரண்யா பானர்ஜி, ‘கேலா ஹோபே’ சொல்லை உருவாக்கிய தேபாங்ஷு பட்டாச்சார்யா உள்ளிட்ட பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பாஜகவுக்கு எதிராக மம்தா மெகா பிளான் வகுத்திருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


