தமிழ்நாட்டில் கடந்த பிப்.18ம் தேதி மாலையில் பிறை தெரிந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் பிப்.19ம் தேதி முதல் ரமலான் புனித நோன்பை அனுசரித்து வருகின்றனர்.
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் சூரிய அஸ்தமனம் வரை உண்ணாமல், நீரருந்தாமல் நோன்பு நோற்று, சிறப்புத் தொழுகை (தராவீஹ்) மற்றும் இஃப்தார் நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை, திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளும் ஐயூஎம்எல், மமக, மநேஜக போன்ற இஸ்லாமிய மதம் சார்ந்த கட்சிகளும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கமாகும். இது தவிர, ஆளுநரும் இஃப்தார் விருந்து அளிப்பது வழக்கம்.
இந்நிலையில், தவெக சார்பில் மார்ச் 18ம் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் அக்கட்சியின் தலைமை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்பார் எனவும் இதில் பங்கேற்க 1,000 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து தவெகவை சேர்ந்த இஸ்லாமியர்கள் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு 1,000 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. அதிலும் குறிப்பாக, இஸ்லாமிய பெண்கள் புர்கா உடை அணிந்து வந்திருந்தனர்.
விஜய்க்கு இஸ்லாமியர்கள் ஹஜ்யாத்திரை சென்று வழிபடும் புனித தலமான மெக்கா நகரின் வழிபாட்டு மையத்தை வெள்ளியில் வடிவமைத்து, அதற்குள் அவர்களின் புனித நூலான குரானை வைத்து நினைவு பரிசு வழங்க ஒருவர் கொண்டு வந்திருந்தார்.
இந்நிலையில், நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், இஸ்லாமிய சகோதரர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தவெக தலைவர் விஜய், கூட்டணி குறித்து பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். தவெக அரசியலுக்கு வந்ததில் இருந்தே அதைப் பற்றி வதந்திகள் பரப்பிக் கொண்டுள்ளனர். எப்போதும் மதச்சார்பற்ற கொள்கையில் சமரசம் இல்லை. தவெக தலைமையில் தான் கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தவெக அந்த டீம், இந்த டீம் என்று சில வதந்திகளை பரப்பிக் கொண்டே இருந்தனர். விஜய் எந்த டீமும் இல்லை, மக்கள் டீம் என்று தெரிந்த பிறகு அந்த கூட்டணி, இந்த கூட்டணி என்று பேசுகின்றனர். யார் எந்த அவதூறு பரப்பினாலும் எல்லாம்வல்ல இறைவன் அருளால் நினைத்த இலக்கை அடைய முடியும் என்றும் குறிப்பிட்டார்.


