மார்ச் மாதத் தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை, கடந்த 14ம் தேதி முதல் நேற்று முன்தினம் (மார்ச் 18) வரை, கடந்த 4 நாட்களில் (ஞாயிறுக்கிழமை விடுமுறை) மட்டும் சவரனுக்கு மொத்தம் ரூ.3,360 வரை சரிந்தது.
இதனிடையே, தங்கம் விலை மார்ச் 19, காலையில் சவரனுக்கு ரூ.2,160, மாலையில் சரவனுக்கு ரூ.3,200 என நேற்று மட்டும் சவரனுக்கு மொத்தம் ரூ.5,360 வரை குறைந்தது. இதனால், நேற்று மாலையில் தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 200 ஆகவும், கிராம் விலை ரூ.13,900 ஆகவும் விற்பனையானது.
இதன் மூலம், சந்தை செயல்பட்ட கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு மொத்தம் ரூ.8,720 சரிவடைந்தது.
இந்நிலையில், இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600க்கும் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து கிராம் ரூ.13,950க்கும் விற்பனையாகிறது.
அதே நேரம், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கடந்த 2 நாட்களில் (மார்ச் 17-18) கிலோவுக்கு ரூ.10,000 குறைந்த நிலையில், இன்று கிராமுக்கு மேலும் ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.260க்கும், கிலோ கட்டி வெள்ளி ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தினால், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, உலக பங்குச் சந்தை சரிவு ஆகியவற்றின் தாக்கத்தினால் தங்கத்தின் விலை உயரும் என்று கணிக்கப்பட்ட நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வதை சர்வதேச முதலீட்டாளர்கள் குறைத்துள்ளதால், தங்கம் விலை குறைந்து வருவதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.


