சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதுவரை தொகுதி பங்கீடு, தொகுதி ஒப்பந்தம் தொடர்பான பணிகளில் மந்தமாக இருந்த அரசியல் கட்சிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
திமுகவை பொறுத்தவரை, மெகா கூட்டணி அமைத்து அதில் தொகுதி பங்கீடு, அது தொடர்பான ஒப்பந்தம் என தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
அதே நேரம், அதிமுகவை பொறுத்தவரை இன்னும் எந்த கூட்டணி கட்சிக்கும் தொகுதிகளை பிரித்து கொடுக்கவில்லை. விரைவில் தொகுதி பங்கீடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று இபிஎஸ் கூறி வந்தாலும், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சுமார் ஒன்றரை மணி நேரம் சந்தித்து பேசினார்.
அதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளதாகவும் பியூஷ் கோயல் சென்னை வர உள்ளதாகவும் கூறினார், மேலும், இன்னும் 4 நாட்களில் எல்லாம் தெரிந்து விடும் என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, தமிழக என்டிஏ கூட்டணியில் உள்ள டிடிவி தினகரன், அன்புமணி ஆகியோர் அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்தனர். இந்த சந்திப்பினால், பியூஷ் கோயலின் சென்னை வருகை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு தொடர்பாக இபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார்.
இபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அமித் ஷாவை சந்தித்த பிறகு, பியூஷ் கோயல் சென்னை வருவதால், கூட்டணி தொகுதி பங்கீடு சுமூகமாக நடைபெறும் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
