தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த 15ம் தேதி அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் ஏப்.23ம் தேதி மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தொகுதி பங்கீடு, தொகுதி ஒப்பந்தம் தொடர்பாக அரசியல் கட்சிகளும், தேர்தல் தயாரிப்பு பணிகளை தேர்தல் ஆணையமும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.
இந்த தேர்தலில் திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி, தவெக மற்றும் நாதக இடையே 4 முனைப்போட்டி நிலவிய நிலையில், தற்போது சசிகலா-ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது. இதனால் தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெறப்போது யார் என்பது குறித்து பல்வேறு ஊடகங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, ஏஎன்எஸ் நிறுவனம் கடந்த பிப். 7 முதல் மார்ச் 12 வரை, வயது வாரியாக நடத்திய கருத்துக்கணிப்பு முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த ஏஎன்ஸ் நிறுவன பிரதிநிதிகள், கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, இந்த தேர்தலில் திமுக 44.1% வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கும். அதிமுக 38.5% வாக்குகளுடன் 54 தொகுதிகளில் வெற்றி பெறும். தற்போதைய நிலையில், அதிமுகவைவிட திமுக கூட்டணி 6.4% வாக்குகள் கூடுதலாக, அதாவது 44.9% வாக்குகளைப் பெற்று 180 தொகுதிகளில் வெற்றி பெறும் எனத் தெரிவித்தனர்.
மேலும், கடந்த 2019ம் ஆண்டு முதல் பெண்கள் வாக்குகள் திமுகவுக்கு அதிகரித்துள்ளதாகவும், மு.க.ஸ்டாலின் அரசு நிறைவேற்றிய திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளதால் திமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், மகளிர் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டது பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் ஏஎன்எஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தங்களது கருத்து கணிப்பில், திமுக கூட்டணியின் வெற்றி தெளிவாக உள்ளதாகவும், அரசியல் களத்தில் முதன்முறையாக களம் காணும் நடிகர் விஜய்யின் தவெக 9.7% வாக்குகளைப் பெறும் என தெரிவித்துள்ளது.
மேலும், சீமானின் நாதக 4.8% வாக்குகளைப் பெறக்கூடும். இதர கட்சிகள் மற்றும் நோட்டா ஆகியவற்றுக்கு 2.1% வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல வாரியாக, மேற்கு மண்டலத்தில் 50 தொகுதிகளில் 32ல் திமுக, 18 இடங்களில் அதிமுக வெற்றி பெறும். தெற்கு மண்டலத்தில் மொத்தம் உள்ள 58 தொகுதிகளில் திமுக 42, அதிமுக 16ல் வெல்ல வாய்ப்பு உள்ளது.
மத்திய மண்டலத்தில் 37 தொகுதிகளில் திமுக 35 இடங்களில், அதிமுக 2 இடங்களில் வெற்றி பெறும். வடக்கு மண்டலத்தில் உள்ள 52 தொகுதிகளில் 35 தொகுதிகளில் திமுக, 17 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என்று ஏஎன்எஸ் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
