சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதுவரை தொகுதி பங்கீடு, தொகுதி ஒப்பந்தம் தொடர்பான பணிகளில் மந்தமாக இருந்த அரசியல் கட்சிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
திமுகவை பொறுத்தவரை, மெகா கூட்டணி அமைத்து அதில் தொகுதி பங்கீடு, அது தொடர்பான ஒப்பந்தம் என தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
அதே நேரம், அதிமுகவை பொறுத்தவரை எந்த கூட்டணி கட்சிக்கும் தொகுதிகளை பிரித்து கொடுக்காத நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இபிஎஸ் கடந்த 19ம் தேதி டெல்லியில் சந்தித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளதாகவும் பியூஷ் கோயல் சென்னை வர உள்ளதாகவும் கூறினார், மேலும், இன்னும் 4 நாட்களில் எல்லாம் தெரிந்து விடும் என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, தமிழக என்டிஏ கூட்டணியில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் அடுத்தடுத்து டெல்லி சென்று அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர்.
இந்நிலையில், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் நேற்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த சென்னை வந்தார்.
இதனைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு என்டிஏ கூட்டணி தலைவர்களான இபிஎஸ், பியூஷ் கோயல், டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
இதில், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். தவிர, டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 11 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் மற்றும் பியூஷ் கோயல் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்நிலையில், அமமுகவுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சென்னை சைதாப்பேட்டை, சோளிங்கர் அல்லது திருப்பத்தூர், பூவிருந்தவல்லி, நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், பெரியகுளம், மதுரை மத்திய தொகுதி, தஞ்சை, காரைக்குடி, திருச்சி மேற்கு மற்றும் மன்னார்குடி தொகுதிகள் ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.


