புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்.9 வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதையடுத்து, அங்கு கடந்த 16ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.
இதனிடையே, தமிழகத்தில் காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளைக் கேட்டது போல், புதுச்சேரியில் திமுக கூடுதல் தொகுதிகள் கேட்டு வலியுறுத்தி வந்ததால், புதுச்சேரி கூட்டணியில் காங்கிரஸ், திமுக இடையேயான தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலை நீடித்து வந்தது.
இதில் உடன்பாடு எட்டப்பட்டு இறுதியாக காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும் திமுகவிற்கு 14 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரியில் திமுக போட்டியிட உள்ள 13 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வில்லியனூரில் இரா. சிவா, மங்களம் தொகுதியில் எஸ். எஸ். ரங்கன், திருபுவனையில் பி. அங்காளன், பாகூரில் ஆர். ஆர். செந்தில்குமார், முதலியார்பேட்டையில் சம்பத், உப்பளத்தில் அனிபால் கென்னடி, உருளையன்பேட்டையில் எஸ். கோபால், நெல்லித்தோப்பில் வே. கார்த்திகேயன், ராஜ்பவன் தொகுதியில் விக்னேஷ் கண்ணன், காலாப்பட்டில் ரமேஷ், கதிர்காமத்தில் ப. வடிவேலு, காரைக்கால் தெற்கில் ஏ.எம்.எச். நாஜிம், நிரவி டி.ஆர். பட்டினம் தொகுதியில் எம். நாக தியாகராஜன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் திமுக, அதற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் விசிகவுக்கு ஒரு தொகுதியை ஒதுக்கியுள்ளது. அதன்படி, விசிகவுக்கு உழவர்கரை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், முன்னதாக விசிக தலைவர் திருமாவளவன் புதுச்சேரியில் ஊசுடு, உழவர்கரை, நெட்டப்பாக்கம் தொகுதிகளில் விசிக தனித்து போட்டியிடும் என்றும் மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிக்கும் ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.


