நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் பாடலாசிரியராக வலம் வருகிறார்.
இவர் தமிழில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் அவரது மகனாக நடித்திருந்தார். இப்படத்தில் அவரது கதாபாத்திரம் மிக சிறப்பாக அமைந்ததுடன், நல்ல நடிப்பையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
கென் கருணாஸ் நாயகனாகவும் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ள படம் `யூத்’. இதில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி, நளினி, அனிஷ்மா, மீனாக்ஷி, ப்ரியான்ஷி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் கடந்த 19ம் தேதி திரையரங்குளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இப்படம் முதல் 4 நாட்களில் உலக அளவில் 28.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தை பார்த்த திரைபிரபலங்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சிம்பு இப்படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய புகைப்படங்கள் வெளியானது. இப்படத்தின் ட்ரெய்லரையும் பாராட்டி சிம்பு பதிவிட்டிருந்தார். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இப்படத்தில் கென் சிம்பு ரசிகராக நடித்துள்ளார்.
பாராட்டுகளைக் குவிக்கும் அதே நேரத்தில் இப்படம் வசூலையும் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
